Monday, October 21, 2013

Farm Fresh Consumer Outlets Inauguration in Chennai.


CM Chaired a Meeting on Bonus Disbursement for Deepavali .

Honble Chief Minister Chaired a Meeting on Bonus Disbursement to the Employees of State PSUs for Deepavali Festival  – 21.10.2013 

     மக்களுக்கு இன்றியமையா சேவைகளை வழங்குவதிலும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

     தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2012-2013 ஆம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்குவது குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் எனது தலைமையில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

     இந்தக் கூட்டத்தில் மாண்புமிகு நிதி அமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. நத்தம் இரா. விசுவநாதன், மாண்புமிகு நகராட்சி நிருவாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் திரு. கே.பி. முனுசாமி, மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. இரா. வைத்திலிங்கம், மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. செல்லூர் கே. ராஜூ, மாண்புமிகு உணவுத் துறை அமைச்சர் திரு. ஆர். காமராஜ், மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு. பி. தங்கமணி, மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. வி. செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், இ.ஆ.ப., நிதித் துறை முதன்மைச் செயலாளர் திரு. க. சண்முகம், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



      இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விரிவான கலந்துரையாடலுக்குப் பிறகு, ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்பதற்கேற்ப உழைக்கும் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களிடையே உற்சாகத்தினை ஏற்படுத்திடும் வகையிலும், பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 2012-2013 ஆம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகையினை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன்படி,

1. தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், அரசு ரப்பர் கார்ப்பரேஷன், தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகள், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை, அதாவது 20 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.

2. கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து தகுதியுடைய பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும், லாபம்  ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகையாக 20 விழுக்காடும் வழங்கப்படும்.

3. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும் வழங்கப்படும்.

4. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.

5. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்கள், போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1,500 ரூபாயும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1,200 ரூபாயும் கருணைத் தொகையாக வழங்கப்படும்.

6. மொத்தத்தில், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு 240 கோடி ரூபாய் வழங்கப்படும்.

 எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகுக்கும்.

ஜெ ஜெயலலிதா 
தமிழ்நாடு முதலமைச்சர் 




Wednesday, October 16, 2013

Honble Chief Minister Extended Time for Auto Meters Recalibration.

     மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வையும், பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் நலன்களையும் கருத்தில் கொண்டு, ஆட்டோ கட்டணத்தை திருத்தியமைக்கவும், சென்னையில் இயங்கி வரும் ஆட்டோ ரிக்ஷாக்களில் Electronic Digital Printer உடன் கூடிய மீட்டரை அரசு செலவில் பொருத்தவும் உத்தரவிட்டார்கள். இது மட்டுமல்லாமல், மாற்றியமைக்கப்பட்ட கட்டணத்தை ஆட்டோ மீட்டரில் திருத்தம் செய்ய 15.10.2013 வரை அவகாசம் வழங்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் அறிவித்தார்கள்.

     மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் உத்தரவிற்கிணங்க, இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.



    சென்னை மாநகரில் இயக்கப்படும் 71,470 ஆட்டோக்களில், 10.10.2013 நாளைய நிலவரப்படி, 61,235 ஆட்டோக்களுக்கு, திருத்தியமைக்கப்பட்ட புதிய கட்டண அட்டை வழங்கப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல், 24,849 ஆட்டோக்களுக்கு தற்போதுள்ள மீட்டர்களிலேயே கட்டணங்கள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள ஆட்டோக்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட கட்டண அட்டைகள் வழங்கும் பணியும், தற்போதுள்ள மீட்டர்களில் கட்டணங்களை திருத்தி அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

    இந்தப் பணிகள் நிறைவுறாத நிலையினைக் கருத்தில் கொண்டும், ஆட்டோ மீட்டர் பழுதுபார்க்க கூடுதல் நேரம் தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டும், 15.10.2013 வரை உள்ள காலக்கெடுவினை 15.11.2013 வரை ஒரு மாதம் கால நீட்டிப்பு வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

Honble Chief Minister Announced Special Buses for Deepavali.

      தீபாவளித் திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுவர ஏதுவாக, அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பிலும் சிறப்புப் பேருந்துகளை இயக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

     மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் உத்தரவிற்கிணங்க, அனைத்து மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து 29.10.2013 அன்று 700 சிறப்புப் பேருந்துகள், 30.10.2013 அன்று 1000 சிறப்புப் பேருந்துகள், 31.10.2013 அன்று 1200 சிறப்புப் பேருந்துகள், 1.11.2013 அன்று 1400 சிறப்புப் பேருந்துகள் என 29.10.2013 முதல் 1.11.2013 வரை மொத்தம் 4300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

     அதேபோல், சென்னையைத் தவிர்த்து மாநிலம் முழுவதிலும் இருந்து 29.10.2013 அன்று 634 சிறப்புப் பேருந்துகள், 30.10.2013 அன்று 950 சிறப்புப் பேருந்துகள், 31.10.2013 அன்று 1256 சிறப்புப் பேருந்துகள், 1.11.2013 அன்று 1210 சிறப்புப் பேருந்துகள் என 29.10.2013 முதல் 1.11.2013 வரை 4050 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மொத்தத்தில், தமிழ்நாடு முழுவதிலிருந்து 29.10.2013 முதல் 1.11.2013 வரை மொத்தம் 8350 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதே போன்று, தீபாவளி பண்டிகை முடிந்த பின்பு, பொதுமக்கள் மீண்டும் தங்கள் ஊர்களுக்கு திரும்பும் வகையில், இதே அளவிலான பேருந்துகள் நவம்பர் 2.11.2013 முதல் 5.11.2013 வரை இயக்கப்படும்.



     மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் உத்தரவிற்கிணங்க, 300 கிலோ மீட்டர் தூரத்திற்குமேல் செல்லும் சிறப்புப் பேருந்துகளுக்கு www.tnstc.in என்ற இணையதளம் மூலம், இணையதள பயணச்சீட்டு முன்பதிவு முறையில், (Online Ticket Reservation System) பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கணினி மூலம் உடனடி தள முன்பதிவு செய்யும் வகையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 25 சிறப்பு முன்பதிவு மையங்கள் செயல்படவும், சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இதுதவிர, தீபாவளி பண்டிகையை ஒட்டி அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் குறித்து சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலுள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக அலுவலக தொலைபேசி எண்.24794709-க்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் ஆணைக்கிணங்க எடுக்கப்பட்டுள்ள மேற்காணும் நடவடிக்கைகள், தமிழக மக்கள் தீபாவளித் திருநாளை முன்னிட்டு எவ்வித சிரமுமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவர வழிவகுக்கும்.

Tuesday, October 15, 2013

Statement of the Honble Chief Minister on Awards to Police Officers.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிக்கை

    இந்து முன்னணிப் பிரமுகர் வெள்ளையப்பன் வேலூரில் கொலை செய்யப்பட்ட வழக்கு, பாரதீய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கு, மதுரை திருமங்கலத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் திரு. எல்.கே. அத்வானி அவர்கள் செல்லவிருந்த பாதையில் வெடிகுண்டு வைத்த வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் மதுரையைச் சேர்ந்த ‘‘‘‘போலீஸ்’ ’ ’ ’ பக்ருதீன், பிலால் மாலிக், திருநெல்வேலியைச் சேர்ந்த பன்னா இஸ்மாயில் மற்றும் நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் ஆகியோர் சம்பந்தப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சிறப்புப் புலனாய்வுப் பிரிவுடன் மாநில உளவுத் துறையின் சிறப்புப் பிரிவும் இணைந்து துப்பு துலக்கியதன் பேரில், சென்னை பெரியமேடு காவல் நிலைய சரகம் சூளை அருகே மேற்படி தலைமறைவு எதிரிகளில் ஒருவரான ‘‘‘‘போலீஸ்’ ’ ’ ’ பக்ருதீன் 4.10.2013 அன்று மாலை கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கியிருந்த இதர தலைமறைவு எதிரிகளான பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோரை தமிழக காவல் துறையினர் 5.10.2013 அன்று கைது செய்தனர்.

   இந்தப் பணியில் ஈடுபட்ட காவல் துறையினரின் வீரதீரச் செயலையும், கடமை உணர்வையும் பாராட்டி, தமிழகக் காவல் துறையின் பெருமையை நிலைநிறுத்தியதற்காக அவர்களை கௌரவிக்கும் வகையில் அவர்கள் அனைவருக்கும் பரிசுத் தொகை மற்றும் ஒருபடி பதவி உயர்வு அளிக்க நான் உத்தரவிட்டேன்.



    இதன்படி, இந்த வீரதீரச் செயலில் ஈடுபட்டு படுகாயம் அடைந்து, சென்னை போரூர் இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை, சிறப்புப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளர் திரு. எஸ். லட்சுமணன் அவர்களை 9.10.2013 அன்று நான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவருடைய வீரதீரச் செயலைப் பாராட்டி 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவருடைய மனைவியிடம் வழங்கினேன். மேலும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு, சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் திரு. எஸ். லட்சுமணன் அவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்து, அவர் இயல்பு நிலைக்குத் திரும்பிட தேவையான அனைத்து சிகிச்சைகளையும் அளிக்குமாறு நான் அறிவுறுத்தினேன். அவரது சிகிச்சைக்கான முழு செலவையும் தமிழக அரசு ஏற்கும் என்பதையும் அறிவித்தேன்.

     இதன் தொடர்ச்சியாக, தலைமறைவு எதிரிகளை கண்டுபிடிக்க ஏதுவாக விரைவு நடவடிக்கைகளை மேற்கொண்ட காவல் துறையினரை 9.10.2013 அன்று தலைமைச் செயலகத்திற்கு வரவழைத்து, அவர்களை கௌரவிக்கும் வகையில், 21 பேருக்கு தலா 5 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி, உயிரை துச்சமென கருதி வீரதீரத்துடன் செயலாற்றியமைக்காக எனது மனமார்ந்த பாராட்டுதல்களையும் நான் தெரிவித்தேன். இது போன்ற குற்றவாளிகளைப் பிடிப்பதில் கூட்டு முயற்சி மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடு ஆகியவை இன்றியமையாதவை. இதனைக் கருத்தில் கொண்டு, இவ்வழக்குகளிலும், இது தொடர்பான சில வழக்குகளிலும் சிறப்பாகப் பணியாற்றி நுண்ணறிவு தகவல்கள் அளித்து, தங்கள் கடமையை செவ்வனே செய்துள்ள வேறு பலருக்கும் ரொக்கப் பரிசினை வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன்.

     1. இதன்படி, 4.10.2013 அன்று போலீஸ் பக்ருதீனை பிடிப்பதற்கு முயற்சி செய்த ஆய்வாளர் திரு. லட்சுமணன் மற்றும் திரு. ரவீந்திரன் ஆகியோரை எதிரி தாக்கி தப்ப முயற்சித்த போது அங்கு உடனடியாக வந்து அந்தக் குற்றவாளியை மடக்கி கைது செய்வதற்கு பெரும் துணையாக இருந்த பெரியமேடு காவல் நிலைய ஆய்வாளர் திரு. வீரகுமார் அவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும்.

     2. மேலும், புத்தூரில் வீட்டில் பதுங்கியிருந்த பன்னா இஸ்மாயில் மற்றும் பிலால் மாலிக் ஆகிய குற்றவாளிகளை வெளிக் கொணருவதற்கும், வீட்டிலிருந்த பெண் மற்றும் மூன்று குழந்தைகளை உயிருடன் வெளியே கொண்டு வருவதற்கும் குற்றப் பிரிவு கண்காணிப்பாளருக்கு உதவியாக இருந்த மதுரை சிறப்பு நுண்ணறிவு பிரிவு தலைமைக் காவலர் திரு. எம். விஜயபெருமாள் மற்றும் மதுரை சிறப்பு புலனாய்வுப் பிரிவு தலைமைக் காவலர் திரு. கே. மாரியப்பன் ஆகிய இருவருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

     3. போலீஸ் பக்ருதீனை பிடிப்பதற்கு ஆய்வாளருக்கு தகவல் அனுப்பி உதவி செய்த பெரியமேடு காவல் நிலைய பெண் காவலர் செல்வி ராதிகா அவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும், மேற்படி வழக்குகளில் தக்க தகவலை தகுந்த சமயத்தில் அளித்த மதுரை சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் திரு. எஸ். ராமமூர்த்தி மற்றும் திருநெல்வேலி சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் திரு. பி. பண்டரிநாதன் ஆகியோருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும் பரிசாக வழங்கப்படும்.

    4. இது தவிர, சென்னையில் பெரியமேடு காவல் ஆய்வாளருக்கு உதவி செய்த ஐந்து காவல் அலுவலர்கள், புத்தூரில் வெடிப் பொருட்களை கைப்பற்றி செயலிழக்கச் செய்த ஆறு பேர் மற்றும் பல்வேறு வழக்குகளில் எதிரிகளை அடையாளம் காணவும், பிடிக்கவும் உதவி செய்த பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அலுவலர்கள்; மேலும் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு (Special Division), சிறப்பு புலனாய்வுப் பிரிவு (Special Investigation Division), சிறப்பு நுண்ணறிவுக் குழு ((Special Intelligence Cell), சிறப்புப் புலனாய்வுக் குழு (Special Investigation Team) ஆகிய பிரிவுகளில் பணியாற்றி பயனுள்ள தகவல்கள் சேகரித்தும், விசாரணைகளில் உதவி செய்தும் கடமை உணர்வுடன் பணியாற்றிய அலுவலர்கள் மொத்தம் 245 பேருக்கு தலா 1 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும்.

எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள் காவல் துறையினர் தங்கள் கடமையை மேலும் சிறப்புற செய்ய வழிவகுக்கும்.

ஜெ ஜெயலலிதா ஜெ ஜெயலலிதா 
தமிழ்நாடு முதலமைச்சர்