மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிக்கை – 25.8.2013
அனைத்துத் தரப்பு மக்களையும் அவர்கள் வசிக்கும் இல்லங்களுக்கே சென்று சேர்ப்பதில் முக்கியப் பங்கினை வகிப்பவை ஆட்டோ ரிக்ஷாக்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
தமிழ்நாட்டில் மொத்தம் இரண்டு லட்சத்து 14 ஆயிரம் ஆட்டோ ரிக்ஷாக்கள் உள்ளன. இவற்றில் சென்னைப் பெருநகரில் மட்டும் 71,470 ஆட்டோக்கள் ஓடுகின்றன. இந்த ஆட்டோ ரிக்ஷாக்களுக்கான கட்டணம் 2007 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது.
இதன் பின்னர், எரிபொருள் விலை, உதிரி பாகங்கள் விலை, ஆட்டோ ஓட்டுநர்களுக்கான சம்பளம் ஆகியவை பன்மடங்கு உயர்ந்துவிட்டதால், தற்போதுள்ள கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கங்களும், நுகர்வோர் அமைப்புகளும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் வகையில், ஓர் அலுவல் குழு அமைக்கப்பட்டது.
இதற்கிடையில், ஆட்டோ ரிக்ஷாக்களுக்கான கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பான அனைத்து காரணிகளையும் பரிசீலித்து ஒரு முடிவு எடுக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, எனது உத்தரவின் பேரில், ஆட்டோ ரிக்ஷா கட்டண நிர்ணயம் தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் முன்னிலையில், அரசு அதிகாரிகள், ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கங்களைச் சார்ந்த பிரதிநிதிகள், நுகர்வோர் அமைப்புகளைச் சார்ந்த பிரதிநிதிகள் ஆகியோரைக் கொண்ட ஒரு முத்தரப்புக் கூட்டம் 10.8.2013 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆட்டோ கட்டணங்கள் எந்த அளவுக்கு திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்பது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளை எடுத்துக் கூறினர்.
இதன் தொடர்ச்சியாக, 22.8.2013 அன்று தலைமைச் செயலகத்தில் எனது தலைமையில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாண்புமிகு நிதி அமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. நத்தம் ஆர். விசுவநாதன், மாண்புமிகு நகராட்சி நிருவாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் திரு. கே.பி. முனுசாமி, மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. ஆர். வைத்திலிங்கம், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. வி. செந்தில்பாலாஜி, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், நிதித் துறை முதன்மைச் செயலாளர் திரு. க. சண்முகம், உள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் நிரஞ்சன் மார்டி, சட்டத் துறைச் செயலாளர் முனைவர் கோ. ஜெயச்சந்திரன், சென்னைப் பெருநகர காவல் ஆணையர் திரு. எஸ். ஜார்ஜ் மற்றும் தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் திரு. ஏ.எல். சோமயாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விரிவான விவாதத்திற்குப் பிறகு, பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் / ஆட்டோ உரிமையாளர்கள் ஆகிய இரு தரப்பினரும் பயனடையும் வகையில் கீழ்க்காணும் நடவடிக்கைகளை எடுக்க நான் உத்தரவிட்டுள்ளேன். இதன்படி, சென்னையில் ஓடும் ஆட்டோக்களுக்கு
1. முதல் 1.8 கிலோ மீட்டர் தூரத்திற்கான ஆட்டோ ரிக்ஷா கட்டணம் 25 ரூபாய் என்றும், ஒவ்வொரு கூடுதல் கிலோ மீட்டருக்கு கட்டணம் 12 ரூபாய் என்றும் நிர்ணயம் செய்யப்படும்.
2. இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆட்டோ ரிக்ஷாக்களில் பயணிப்போர் கூடுதலாக 50 விழுக்காடு இரவுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
3. காத்திருப்புக் கட்டணம், ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கு 3 ரூபாய் 50 காசு என்ற வீதத்தில், ஒரு மணி நேரத்திற்கு 42 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படும்.
4. இந்தத் திருத்திய கட்டணம் இன்று முதல் (25.8.2013) நடைமுறைக்கு வரும்.
5. திருத்தி அமைக்கப்பட்ட கட்டண விகிதம் நாளிதழ்களில் பிரசுரம் செய்யப்படும். இதன் அடிப்படையில் பயணிகளிடமிருந்து கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.
6. திருத்தி அமைக்கப்பட்ட கட்டண விகித அட்டையை 15.9.2013-க்குள் சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அல்லது வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தினால் நடத்தப்படும் சிறப்பு முகாம் மையத்திலிருந்தும் ஆட்டோ ஓட்டுநர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
7. மாற்றி அமைக்கப்பட்ட கட்டணத்தை ஆட்டோ மீட்டரில் திருத்தம் செய்ய 15.10.2013 வரை அவகாசம் வழங்கப்படும்.
8. இது மட்டுமல்லாமல், இந்தியாவிலேயே முதன் முறையாக, சென்னைப் பெருநகரில் இயங்கி வரும் ஆட்டோ ரிக்ஷாக்களில் இடத்தைக் காட்டும் கருவியுடன், அதாவது ழுடடியெட ஞடிளவைiடிniபே ளுலளவநஅ-உடன் கூடிய மின்னணு இலக்க அச்சடிக்கும் இயந்திரத்துடன், அதாவது, நுடநஉவசடிniஉ னுபைவையட ஞசiவேநச உடன் கூடிய மீட்டர், விலை ஏதுமில்லாமல் அரசு செலவில் பொருத்தப்படும். இதற்காக அரசுக்கு 80 கோடி ரூபாய் செலவு ஏற்படும். இதன் மூலம் பயணித்த தூரம் மற்றும் அதற்கான கட்டணம் அடங்கிய ரசீது பயணிகளுக்கு வழங்கப்படுவதோடு மட்டுமல்லாமல், பயணிகளிடமிருந்து சரியான கட்டணம் வசூலிக்கப்படுவது உறுதி செய்யப்படும். மேலும், ஆட்டோ ரிக்ஷாக்களின் இயக்கங்களை கண்காணிக்கவும் வழிவகை ஏற்படும்.
9. ஆட்டோவில் பயணிப்போருக்கு ஏதேனும் ஆபத்து நேரும் சூழ்நிலை உருவானால், ஆட்டோ மீட்டருடன் பொருத்தப்பட்டுள்ள அபாய பொத்தானை, அதாவது ஞயniஉ க்ஷரவவடிn-ஐ பயணிகள் அழுத்தலாம். இதன் மூலம், பயணிகள் ஆபத்தில் இருப்பது கட்டுப்பாட்டு அறைக்கு தெரிய வந்து, அதன் அடிப்படையில் காவல் துறையினர் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
10. ஆட்டோ ரிக்ஷாக்களின் இயக்கங்களை போக்குவரத்துத் துறையும், காவல் துறையும் தீவிரமாக கண்காணிக்கும். இந்தக் கண்காணிப்பின் போது, மாற்றி அமைக்கப்பட்ட கட்டணத்திற்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களின் ஓட்டுநர் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும். இது தவிர, வாகனம் பறிமுதல் செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், அதன் இயக்கம் முடக்கப்பட்டு, அனுமதிச் சீட்டு ரத்து செய்யப்படும்.
11. ஆட்டோவில் பயணிப்போர் புகார் அளிக்க ஏதுவாக, பொதுவான புகார் எண் உருவாக்கப்பட்டு, அந்த தொலைபேசி எண் ஒவ்வொரு ஆட்டோவிலும் பிரதானமாக எழுதப்படும்.
எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கையின் மூலம், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெ ஜெயலலிதா ஜெ ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர் .
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை-9